இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாளுக்கு அவருடைய தந்தை இசைஞானி இளையராஜா க்யூட்டாக ஹேப்பி பர்த்டே சொல்லி வீடியொ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். யுவன் பிறந்தப்போ தான் ரஜினியின் ஜானி படத்துக்கு பாடல் கம்போசிங் செய்ய வெளியூர் சென்றிருந்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இசையமைப்பாளராக திகழும் யுவன்சங்கர் ராஜா, இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். யுவன் சங்கர் ராஜாவுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இசைஞானி இளையராஜா தனது இளைய மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் இளையராஜா கூறியிருப்பதாவது: “ஒரு காலகட்டத்துல வந்து ஆழியார் டேம்ல போய் கம்போஸ் பண்றது கொஞ்ச காலத்துல பழக்கமாச்சு… நிறைய படங்களுக்கு ஆழியார் டேம் கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிட்டு, ஒரு 2 நாள், 3 நாள் தங்கி 4-5 படம் கம்போஸ் பண்றதுனு சொல்லி, புரோகிராம் போட்டுட்டு போயிடுவோம். அந்த மாதிரி ஒரு கம்போசிங்குக்கு டைரக்டர் மகேந்திரனும், கே.ஆர்.ஜி-யும் என்னை கூப்பிட்டு போறாங்க. நான் என்னுடைய குழுக்களோட போயிருந்தேன். அப்போதெல்லாம் பக்கவாத்தியம் வாசிக்கிறவங்க எல்லாம் கூட வருவாங்க. அவங்களோட போயிருக்கோம். கம்போசிங் எல்லாம் பண்ணிகிட்டிருக்கோம். கம்போசிங் பண்ணிக்கிட்டிருக்கும்போது புரொடியுசர் கே.ஆர்.ஜி அவருக்கு கோயம்புத்தூர்ல வீடு இருக்கிறதுனால, வீட்டுக்கு போயிட்டு வருவார். அவர் போயிட்டு சாயங்காலம் வந்த உடனே சொன்னார், உன் ஒய்ஃப்க்கு டெலிவரி ஆயிடுச்சியா… உனக்கு பய்யன் பொறந்திருக்கான் அப்படினு சொன்னார். அப்ப சந்தோஷமா இருந்தது. அப்ப நா பாருங்க… ஒய்ஃப் டெலிவரி டைம்லகூட வந்து நான் கம்போசிங் பண்ற மாதிரிதான் இருந்திருக்கேனே தவிர, அவங்கள பக்கத்துல இருந்து பாத்துக்கனும் அப்படிங்கறதெல்லாம் ஒன்னுமே இல்ல. அவங்களும் அதை பெருசா எடுத்துக்கல. அந்த நேரத்துல அவர் வந்து சொன்னப்போ ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்னைக்கு கம்போஸ் பண்ண பாட்டு சொனாரிட்டா என்ற பாட்டு. அந்த படத்துப் பேர் ஜானி, சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நடித்தபடம், டைரக்டர் மகேந்திரன். புரொடியுசர் கே.ஆர்.ஜி கே.ஆர்.ஜி நேரத்துல பொறந்தது வந்து யுவன். யுவன் ஹேப்பி பர்த்டே யுவன்” என்று இளையராஜா தனது மகனுக்கு மகிழ்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”