ரிஷிவந்தியம்: நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாக ரிஷிவந்தியம் திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் உள்ள வீட்டில் அவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மற்றும் அவரின் தம்பி மனைவி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு நடவு செய்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் இவர்களுடைய நிலத்தை ரிஷிவந்தியம் ஒன்றிய திமுக கவுன்சிலரான ஏசுராஜ் என்பவர் அபகரிக்க முயன்றதாகவும், விளைநிலத்தில் பயிரிட்டிருந்த கரும்பு பயிர்களை அடியாட்கள் துணையுடன் தனது பெயரில் மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி ரூ.5 லட்சம் மோசடி செய்ததாகவும் ஆண்ட்ரூ வின்சென்ட் குடும்பத்தினர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
மேலும் மோசடி குறித்து கேட்ட ஆண்ட்ரூ வின்சென்ட் குடும்ப பெண்களை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாகவும் திமுக கவுன்சிலர் ஏசுராஜ் மீது மூங்கில் துறைபட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஒன்றிய கவுன்சிலர் ஏசுராஜ் மீது மூங்கில்துறைப்பட்டு காவலர்கள் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். என்றாலும் காவல்துறை அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கவுன்சிலர் ஏசுராஜ், ஆன்ரூ வின்செண்ட்டின் வீடு புகுந்து அவரின் மனைவி, தம்பி மனைவி ஆகியோரை அடித்து துன்புறுத்தியதுடன் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும், குழந்தைகளும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது திமுக கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.