ரேஷன் கடை ஊழியர்களுக்கு பறந்த எச்சரிக்கை – தமிழக அரசு கிடுக்கிப்பிடி!

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கூட்டுறவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

உணவுப் பொருள் கடத்தல் தடுப்புக் குற்றப் புலனாய்வு துறையினரால் பல இடங்களில் ரேஷன் அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படும் நேர்வுகளில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்து பொது விநியோகத் திட்டம் தொடர்பாக 16.03.2022 அன்று அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுடன் காணொலி வாயிலாக நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தின் போதும் பல அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அவற்றில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நியாய விலைக் கடைப் பணியாளர்கள் உடனுக்குடன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும், அவர்கள் மீது உரிய ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டு, அப்பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பல அறிவுரைகள் வழங்கப்பட்டும், தற்போதும், சில நியாய விலைக் கடைப் பணியாளர்கள் தொடர்ந்து அரிசி கடத்தலில் ஈடுபட்டு, அக்கடத்தல் அரிசியை முறைகேடாக விற்பனை செய்து வருவது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இனி வருங்காலங்களில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.