நாகர்கோவில்: விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் கொண்டாட்டத்தை முன்னிட்டு இரு ஆண்டுகளுக்கு பின்னர் தோவாளை மலர்ச் சந்தை நேற்று களைகட்டியது. 100 டன்னுக்கு மேல் பூக்கள் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்கள், பொது இடங்கள், வீடுகளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இதற்காக அதிக அளவில் பூக்கள் மற்றும் பூஜை பொருட்களை நேற்று மக்கள் வாங்கினர்.
இதுபோல், ஓணம் கொண்டாட்டமும் தொடங்கியுள்ளது. குமரி மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். ஓணத்தின்போது அத்தப்பூ கோலமிடுவதற்காக மக்கள் அதிகளவில் பூக்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் கொண்டாட்டத்துக்காக பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
தோவாளை மலர்ச்சந்தையில் நேற்று காலையிலேயே குமரி மாவட்டம் மற்றும் கேரள வியாபாரிகள் மூட்டை மூட்டையாக பூக்களை கொள்முதல் செய்தனர். இதனால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
மல்லிகைப்பூ கிலோ ரூ.1200, பிச்சிப்பூ 750-க்கு விற்பனை ஆனது.அத்தப்பூ கோலத்துக்கான வண்ணமலர்களான சம்பங்கி கிலோ ரூ.400, அரளி ரூ.300, பட்டன்ரோஸ் ரூ. 250, வாடாமல்லி ரூ.120, கோழிக்கொண்டை ரூ.130, மரிக் கொழுந்துரூ.100 என விற்பனை ஆனது.
வியாபாரம் அதிகமாக நடைபெற்றதால், தோவாளை மலர் சந்தையில் நேற்று இரவும் வியாபாரம் மும்முரமாக நடந்தது. பெங்களூரு, ஓசூர், மதுரை, சத்தியமங்கலம், திண்டுக்கல் உட்பட பல இடங்களில் இருந்து 100 டன்பூக்களுக்கு மேல் அதிகமாக தோவாளை மலர்ச் சந்தைக்கு பூக்கள் விற்பனைக்காக வந்திருந்தன.
வியாபாரிகள் கூறியதாவது: கரோனா பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளாக ஓணம், விநாயகர் சதுர்த்தி பண்டிகை போன்றவை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. இதனால், பூ வியாபாரம் இல்லாமல்பாதிக்கப்பட்டோம். நடப்பாண்டு பண்டிகை காலங்கள் களைகட்டியுள்ளன. மக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்குவதால் அனைத்துவியாபாரிகளுக்கும் லாபம் கிடைத்துள்ளது.
ஓணம் கொண்டாட்டம் தொடங்கியுள்ள நிலையில் அத்தப்பூ கோலத்துக்கான வண்ண மலர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. செப்டம்பர் 8-ம் தேதி வரை வியாபாரம் நன்றாக இருக்கும். இரு ஆண்டுகளுக்கு பின்னர் மலர் வியாபாரம் புத்துயிர் பெற்றுள்ளதால் பல ஆயிரம் மலர் விவசாயிகளும், வியாபாரிகளும் மீண்டும் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.