Chennai Tamil News: இன்று (ஆகஸ்ட் 31ம் தேதி) கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வாங்க மக்கள் ஆரவாரத்துடன் கடைகளுக்கு செல்வதால், விநாயகர் சிலைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், சென்னையில் சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் பாரம்பரிய மையமான புரசைவாக்கம் அருகே கொசப்பேட்டை இருண்ட தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
கொசப்பேட்டையில் உள்ள கைவினைஞர்கள் இந்தாண்டு விறுவிறுப்பான வியாபாரத்தை எதிர்பார்த்து தங்கள் வீடுகளிலும் குடோன்களிலும் 500-1,500 சிலைகளை குவித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடக்கவில்லை என்று கவலையுடன் இருக்கின்றனர்.
வழக்கமாக, கொசப்பேட்டையில் உள்ள கைவினைஞர்கள் ஒன்றரை அடி சிலையை சுமார் 600 ரூபாய்க்கு விற்கிறார்கள். கடுமையான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் காரணத்தால் விலை உயர்ந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
கொசப்பேட்டையில் வசித்து வரும் ஏ.மோகன் (வயது 61), மற்றும் அவரது மனைவி சாந்தி (வயது 50), ஆகியோர் புதிய சிலைகளை உருவாக்கி விற்று வருகின்றனர். இன்றும் களிமண் மணலைப் பயன்படுத்தி சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வெகு சில பாரம்பரிய கைவினைஞர்களில் இவர்களும் உள்ளனர்.
இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கு செலவிட்ட முதலீட்டை மீட்டெடுப்பார்களா என்பது உறுதியாக தெரியவில்லை என்று தம்பதியினர் கூறுகின்றனர். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக, பல சக கைவினைஞர்கள் சிறந்த வாய்ப்புகளைத் தேடி வெளியேறியுள்ளனர் என்று அவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் குலாலர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். எனது குடும்பம் பல தசாப்தங்களாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளது. எனது தந்தை தனது 10வது வயதில் கொசப்பேட்டைக்கு வந்து சிலை செய்யும் கலையை கற்றுக்கொண்டார். அப்போது நான் உட்பட அவருடைய பிள்ளைகளுக்கு சிலை செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்.
சுமார் 300 குடும்பங்கள் இந்த சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது 20 குடும்பங்கள் சிலைகள் செய்வதை நிறுத்திவிட்டது. மக்கள் திரைப்படத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர், மீதமுள்ளவர்கள் வீட்டு வேலையாட்கள், காவலாளிகள் போன்ற வேலைகளை பார்க்க தொடங்கிவிட்டனர்.
உங்கள் வீடுகளில் ஓரிரு நாட்கள் வைத்திருக்கும் இந்த சிலைகளை உருவாக்க எங்கள் இரத்தத்தையும் வியர்வையும் அர்பணிக்கிறோம். கலையின் மீதுள்ள ஆர்வமே என்னைப் போன்றவர்களை இந்த தொழிலில் தொடர வைக்கிறது” என்கிறார் மோகன்.
தனது நகைகளை அடகு வைத்து, அதிக வட்டிக்கு பைனான்சியர்களிடம் கடன் வாங்கியதாக சாந்தி கூறுகிறார். மூலப்பொருட்கள், உழைப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் தங்களுக்கு நிறைய செலவாகின்றன, மேலும் அவர்கள் நல்ல லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது என்று அவர் மேலும் கூறுகிறார்.
கிட்டத்தட்ட ஐந்து குடும்பங்கள் அவர்களுக்காக வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் அவர்களின் கூலியைக் கொடுக்க வேண்டும், ஏனெனில் சிறிது தாமதம் கூட தொழிலாளர்களை வேறு தொழில் தேட வைத்துவிடும் என்று கூறுகிறார்.
“எங்களுக்கு போதுமான லாபம் இல்லை, ஆனால் எங்களுக்கு வேறு வேலைகள் தெரியாது, எனவே இந்த தொழிலில் செய்ய முடிந்த அனைத்தையும் செய்கிறோம். தற்காலத்தில் மக்கள் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) ஐப் பயன்படுத்தி சிலைகளை உருவாக்குகிறார்கள். இதில் குறைந்த மனிதவளம் மற்றும் உற்பத்தி செலவுகள் அடங்கும். நாம் விரைவில் 100 சிலைகள் வரை PoP மூலம் செய்யலாம்.
ஆனால் களிமண் மணலில் அப்படி இல்லை. களிமண் மணலைத் தவிர வேறு எந்தப் பொருளிலும் சிலைகள் செய்வதை எங்கள் குடும்பப் பாரம்பரியம் தடைவிதிப்பதால் பாரம்பரிய முறையில் சிலைகளை உருவாக்க விரும்புகிறோம்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே சிலை தயாரிப்பதைத் தொழிலாகக் கொள்ள விரும்பவில்லை. அவர்களின் மூத்த மகள் குத்துச்சண்டை பயிற்சியாளராக பணிபுரிகிறார், இளைய மகளுக்கு திருமணமாகிவிட்டது. அடுத்த தலைமுறையினர் அவர்களைப் போல் கஷ்டப்படுவதை விரும்பாததால் இந்த கலை வடிவம் அவர்களின் தலைமுறையுடன் முடிவடையும் என்று அவர் கூறுகிறார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜெயந்தி, தனது குழந்தைகளின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த தன்னிடம் பணம் இல்லை என்று கூறுகிறார். கோவிட் -19 தொற்றுநோய்களின் போது கூட, வியாபாரம் நடைபெற்றது, ஆனால் இப்போது நிலைமை மந்தமாகிவிட்டது என்று அவர் கூறுகிறார்.
“ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை எங்களின் வியாபாரம் நல்லபடியாக போகும். ஜனவரி மாதம் சிலைகளை தயார் செய்ய ஆரம்பிக்கிறோம். கடந்த ஆண்டு, எங்களுக்கு நல்ல வியாபாரம் இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு மிகவும் மோசமாக உள்ளது. மற்ற ஆண்டுகளில், ஒரு மாதத்திற்கு 40 முதல் 50 பேர் வாங்குவார்கள். ஆனால் இப்போது 10 பேர் கூட சிலைகளை வாங்க வருவதில்லை” என்று கூறுகிறார்.
“எனக்கு தூக்கம் போய்விட்டது, எனக்கு சர்க்கரை நோய் உள்ளது; மற்ற உடல்நலச் சிக்கல்கள் என்னைப் பாதிக்கத் தொடங்குகின்றன. அரசாங்கம் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் சில மாதாந்திர நிதி உதவிகளைப் பெறுவதற்கு அவர்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம். கடந்த அரசாங்கத்தின் காலத்திலும் இதே நிலைதான் இருந்தது. இந்த அரசாங்கம் ஏதாவது செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்கிறார் ஜெயந்தி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil