கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு பிணை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு பிணை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில்,
ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கியிருப்பதையும், பிணை பிணை உத்தரவில் உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கும் கருத்துக்களையும் பார்க்கும்போது, பெரும் அதிர்ச்சி ஏற்படுவதோடு, மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான பிரதான வழக்கு விசாரணை நிலைகுலைந்து பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் பிணை மனுவை விசாரிக்கும் போது, வழக்கு தொடர்பான தகுதி குறித்து விவாதிக்க கூடாது என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள, இது போன்ற நடைமுறைகளை பின்பற்றாமல் பிணை வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், மாணவு ஸ்ரீமதியின் தாயார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களை இன்று நேரில் சந்தித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் பிணை உத்தரவை எதிர்த்து மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.