பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் சந்தித்தார்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
தெலங்கானா மாநில முதலமைச்சரும், தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதிஷ் குமார் ஆகியோர், பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட மூன்று பேரும், காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணியை அமைக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், காங்கிரஸ் அல்லாத கூட்டணி, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தாது என தகவல் வெளியாகி வருவதால், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை, தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பீகார் மாநில துணை முதலமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் உடனிருந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்கும் நிதிஷ் குமார் – கே.சந்திரசேகர் ராவ், தேசிய அரசியல் குறித்து கலந்துரையாடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. எதிர் வரும் மக்களவைத் தேர்தலில், பாஜகவை வீழ்த்த மேற்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இரு மாநில முதலமைச்சர்கள் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.