மதுரை: “8 வழிச்சாலை திட்டம் என்பது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு” என்று தெரிவித்துள்ள தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, “திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், நான் எங்கேயாவது எட்டு வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று கூறியதை யாராவது நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.
தமிழக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 8 வழிச்சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து அவர் கூறியது: “எங்களைப் பொறுத்தவரை 8 வழிச்சாலை திட்டம் என்பது அதுவொரு கொள்கை முடிவு. அரசாங்கம் முடிவு செய்ய வேண்டியது. நாங்கள் ஏற்கெனவே ஆட்சி நடத்தியிருக்கிறோம். பல சாலைகளை நாங்களை அமைத்திருக்கிறோம். நிலங்களை கையகப்படுத்தியிருக்கிறோம். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும்.
வாகனங்களின் உற்பத்தி நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. அப்போது என்ன செய்ய முடியும், சாலைகளை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும். நிலங்களை எடுக்கமுடியாது என்றெல்லாம் சொல்ல முடியாது.
இதன் அடிப்படையில்தான், அப்போதைய எதிர்கட்சித் தலைவரான தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தெளிவாக கூறினார்: நாங்கள் திட்டத்தை எதிர்க்கவில்லை. சட்டமன்ற குறிப்பில் இன்னும் அப்படியே இருக்கிறது. ஜீரோ ஹவரில் பேசும்போது தெளிவாக சொன்னார்: “நான் இந்த திட்டத்தை எதிர்க்கவில்லை. அதேநேரத்தில் பிரச்சினைகள் இருக்கிறது. விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள். அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அவர்கள் என்ன கேட்கிறார்களோ அதனை நிறைவேற்றுங்கள். அதையெல்லாம் செய்துவிட்டு நீங்கள் திட்டத்தை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்.
மேலும், திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், மாற்றுவழி காணுங்கள் என்ற அடிப்படையில் அன்றைக்கு பேசினார். ஆனால் இப்போதைக்கு, நாங்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறோம். இந்த சாலையை பொறுத்தவரை இதனை அமைத்தாக வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த சாலையை அமைப்பதா வேண்டாமா என்று அரசின் சார்பாகதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டுமே தவிர, தனிப்பட்ட முறையில் அமைச்சராக நான் இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல முடியாது.
சில பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் முதல்வர் வேண்டாம் என்று கூறுகிறார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் சாலையை அமைக்க வேண்டும் என்று கூறுவதாக செய்திகள் வருகிறது. ஆட்சிக்கு வந்தபின்னர், நான் எங்கேயாவது 8 வழிச்சாலையை அமைக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்ததாக, அறிக்கை வெளியிட்டதாக யாராவது நிரூபிக்க முடியுமா?
எங்களைப் பொறுத்தவரை 8 வழிச்சாலை போட வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் எங்கேயும் நான் பேசவில்லை. இது ஒரு கொள்கை முடிவு எடுக்க வேண்டிய விஷயம். இது மத்திய அரசு நிதியில் அமைக்கின்ற சாலை, மாநில அரசாங்கம் அமைக்கும் சாலை அல்ல. எனவே அரசின் சார்பாகதான் கொள்கை முடிவு எடுக்க முடியும்” என்று கூறியுள்ளார்.