கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் செய்த ஆப்ரேஷன் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
முன்பெல்லாம் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே தான் நடைபெறும். இருப்பினும், முறையான பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது சில நேரங்களில் தாயும் சேயும் உயிரிழக்கும் சூழல் கூட உருவாகும்.
அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதால் இப்போது பிரசவத்திற்கு மருத்துவமனை செல்லும் பழக்கம் அதிகரித்து உள்ளது.
அசாம்
இந்தச் சூழலில் அசாம் மாநிலத்தில் பிரசவ சமயத்தில் இளம் பெண்ணுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. கரீம்கஞ்ச் மாவட்டத்தில் வசிக்கும் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென சிறு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆப்ரேஷன்
அதைப் பிரசவ வலி என அனைவரும் நினைத்துள்ளனர். இதையடுத்து மருத்துவரும் அந்த பெண்ணுக்கு சிசேரியன் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி அந்தப் பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்யப்பட்டது. ஆப்ரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்த போது தான், அக்குழந்தை குறைப் பிரசவத்தில் இருந்தது தெரிய வந்தது. அதன் பின்னர், குழந்தைக்கும் தாய்க்கும் உரியச் சிகிச்சையை மருத்துவர் அளித்து இருக்க வேண்டும்.
தெரியவில்லை
ஆனால், அதைச் செய்யாமல் அந்த குழந்தையை மீண்டும் பெண்ணின் வயிற்றுக்குள்ளேயே வைத்துத் தைத்துள்ளார் அந்த மருத்துவர். மேலும், அந்த பெண்ணை தொடர்ந்து 11 நாட்கள் மருத்துவமனையிலேயே வைத்துள்ளனர். இதையடுத்து அந்த பெண்ணை நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். வரும் டிச.9ஆம் தேதி தான் அந்த பெண்ணுக்கு பிரசவ தேதி கொடுத்து இருந்தார்கள். இருப்பினும், அதற்கு முன்பே ஏன் ஆப்ரேஷன் செய்தனர் என தெரியவில்லை.
போராட்டம்
இது தொடர்பாகத் தகவல் கிடைத்ததும், மக்கள் மருத்துவமனைக்குள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேதி கூட செக் செய்யாமல் ஆப்ரேஷனை செய்தது டாக்டர் ஏ.கே.பிஸ்வாஸ் என தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக கரீம்கஞ்ச் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மக்களின் திடீர் போராட்டத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
சமரசம்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கரீம்கஞ்ச் போலீசார் மக்களை சமாதானம் செய்தனர். இது தொடர்பாக கரீம்கஞ்ச் போலீஸ் நிலைய பொறுப்பாளர் பிளஸ் கூறுகையில், “நாங்கள் மருத்துவமனைக்கு வந்தோம், இரு தரப்பினருக்கும் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு தரப்பும் ஒரு சமரச முடிவை எட்டிவிட்டனர். இது குறித்து புகார் எதையும் அவர்கள் தரவில்லை” என்றார்.