பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சில வார்த்தைகள் கவனம் பெற்றுள்ளது. அரசியல்வாதிகளுக்கும் ஏற்படும் கருத்து மோதலில் அநாகரிக வார்த்தைகளை உபயோகப்படுத்துவது இளைஞர்களை மோசமான பாதையில் வழி நடத்துவதாக உள்ளது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, பதிலளித்த அண்ணாமலை, இந்த சாக்கடை அரசியலுக்குள் செல்ல கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்… திமுக மரியாதையான அரசியல் செய்தால் நானும் மரியாதைக்காக நடந்து கொள்வேன்… ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்ட நான் ஒன்னும் ‘ஏசு நாதர்’ கிடையாது. என்னை அடித்தால் திருப்பி அடிப்பேன்… இதனால் என்ன இழந்தாலும் பரவாயில்லை… எனக்கு ஆடு, மாடு, விவசாயம் இருக்கு… நான் பிழைத்துக்கொள்வேன்… ஆனால், திமுக தலைவர்களுக்கு அரசியலை விட்டால் என்ன தெரியும்? என்னால் வயக்காட்டில் உள்ள கட்டிலிலும் படுத்து உறங்க முடியும்… திமுக தலைவர்கள் ஏசி அறை இல்லையென்றால் சமாளிக்க முடியாது என கூறினார்.
இதற்கு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எதிரிவினையாற்றியுள்ளார். மனோ தங்கராஜ் இதுகுறித்து போட்டுள்ள ட்வீட்டில், ” தமிழக பாஜக தலைவர் தான் இயேசு நாதர் இல்லை என்பதை கூறி விட்டார், ஆனால் நிச்சயமாக யூதாஸ் தான் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும். நான் நினைத்தால் நாளையே என்னுடைய கிராமத்திற்கு சென்று தோட்டத்தில் விவசாயம் செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜகவின் சனாதனதர்ம மனு நீதி படி பார்த்தால் அண்ணாமலை குல தொழில் தான் செய்திருக்க முடியும். கல்வி உரிமை பெற்று கொடுத்து அண்ணாமலையை IPS ஆக்கியது தான் திராவிட இயக்க அரசியல்” என கூறி அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார்.