வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்கள் 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதில் இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேந்தவர் ஆஸ்டின் பெல்லமி (20). தனது நண்பருக்காக பெல்லாமி எலுமிச்சை மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார், அவ்வாறு மர வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அவர் தவறி தேனீக்கள் கூட்டை வெட்டிவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆஸ்டினை சூழ்ந்த தேனிக்கள் அவரை முற்றிலுமாக சூழ்ந்துகொண்டு கொட்ட தொடங்கின. இதில் தேனீக்கள் அவரை 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதால் ஆஸ்டின் மயக்க நிலைக்கு தள்ளப்பட்டு கோமா நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்டினின் தாய் அளித்த பேட்டி ஒன்றில், “ஆஸ்டினை தேனீக்கள் சூழ்ந்து கொண்டன. அதனால் எங்களால் அவனை உடனடியாக காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. ஆஸ்டின் கீழே இறங்க முயற்சித்தான். ஆனால், அவனாலும் முடியவில்லை” என்று தெரிவித்தார்.
ஆஸ்டினின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் இருந்த தேனீக்களை முழுமையாக நீக்க பல மணி நேரங்கள் தேவைப்பட்டன என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்டனின் மேல்சிகிச்சைகாக வேண்டி அவரது தாயார் இணையத்தில் நிதி திரட்டி வருகிறார்.