ஆகஸ்ட் மாதத்தில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக பெய்த பருவமழை

Southwest Monsoon in Tamil Nadu: தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆகஸ்ட் மாதத்தில் தமிழக மற்றும் புதுவையில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக சதவீத மழை பதிவாகியுள்ளது. 1906-ம் ஆண்டில் 112 சென்டிமீட்டரும்,1909-ம் ஆண்டு 127 சென்டிமீட்டரும், 2022-ல் 93 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது,

தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுவையில் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. எட்டு இடங்களில் கனமழையும் ஒரு இடத்தில் மிக கனமழையும் பெய்துள்ளது.அந்த வகையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திருநெல்வேலி, நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 18 மாவட்டங்கள் தென்மேற்கு பருவமழை காலத்தில் 100 சதவிகிதத்திற்கும் மழை அளவு பதிவாகியுள்ளது.

கடந்த 122 ஆண்டுகளில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் மூன்றாவது முறையாக ஆகஸ்ட் மாதத்தில் அதிக சதவீத மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக 1906-ம் ஆண்டில் 112 சென்டிமீட்டரும், 1909-ம் ஆண்டு 127 சென்டிமீட்டரும், 2022-ல் 93 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது எனக் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் 40 செ.மீட்டர் மழை, இயல்பான மழை அளவு 21 சென்டிமீட்டர் பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவைவிட 88 சதவீதம் அதிகமாகும்.

வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு, மூன்று தேதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் கள்ளக்குறிச்சி, தர்மபுரி உள்ளிட்ட வட தமிழகம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.