ஆரணி: ஆரணி அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் மின்கம்பத்துடன் இணைத்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒப்பந்ததாரரால் இந்த முறைகேடு நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புதுப்பட்டு ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் பழுதடைந்த சாலையை சீரமைக்க 2020-2021ம் ஆண்டு எம்ஜிஎன்ஆர்இஜிஎஸ் திட்டத்தில் ரூ4.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு பழுதடைந்த சாலையை அகற்றி, புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் அதிமுக ஒப்பந்ததாரர் ஈடுபட்டார்.
அப்போது சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் அதை இணைத்து சிமென்ட் சாலையை அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி மக்கள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலை நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையை தரமாக அமைக்கும்படி தெரிவித்துள்ளனர். ஆனால் ஒப்பந்ததாரர் மின்கம்பத்துடன் இணைத்து அமைக்கப்பட்ட சிமென்ட் சாலையை அப்படியே பணிகளை முடிக்காமல் விட்டு சென்றுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைத்த அதிமுக ஒப்பந்ததாரரை கைது செய்து, ஒப்பந்த பணிகளை ரத்து செய்து நடவடிக்கை எடுத்ததுபோல், புதுப்பட்டு கிராமத்தில் சாலை நடுவில் இடையூறாக மின்கம்பத்துடன் சாலை அமைத்த அதிமுக ஒப்பந்ததாரரின் பணிகளை ரத்து செய்து, நிலுவையில் உள்ள எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.