கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புனித பயணம் என்பது பொதுமக்களை நாடிச் செல்லும் பயணம். மக்களை நோக்கிய பயணம் வெற்றி பயணமே… பொதுமக்களைச் சந்திக்க இது ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட்டு யார் சென்றாலும் கட்சிக்குப் பின்னடைவுதான்.
காங்கிரஸ் கட்சி விசித்திரமான முறையில் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால், அரசாங்கத்தில் பங்கு இல்லை. மக்கள் பிரச்னைகளை எங்களால் முன்வைக்க முடியவில்லை, எதிர்க்கட்சியாகவும் செயல்பட முடியாத நிலை. தமிழ்நாட்டில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது சாமான்ய மக்களிடையே வரிச்சுமையை அதிகரித்திருக்கிறது. ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, லாக்டௌன் அறிவிக்கும்போது யாருக்கும் ஊக்கத்தொகை வழங்காதது போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இன்றைய பிரதமரும் நிதியமைச்சரும் உள்ளவரை மக்கள் யாருக்கும் எதுவும் கிடைக்காது. பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகள்மீது அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை ஏவிவிட்டு ஆட்களை இழுத்து வருகிறார்கள். தவறான வழியில் கட்சிகளை உடைக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் குறைந்த உறுப்பினர்களே இருப்பதால் எங்களால் கேள்வி எழுப்ப முடிவதில்லை. இந்துத்துவா கொள்கை வேரூன்றி இருக்கிறது. அதனால், இந்துத்துவாவை எதிர்த்து நாங்கள் முன்வைக்கும் வாதங்கள் இப்போதைக்கு எடுபடவில்லை.
அதானி உலக பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது பா.ஜ.க-வின் சாதனை பட்டியலில் இடம்பெற வேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் பிரச்னைகள் நிறைய உள்ளன. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி அடிக்கடி மக்களைச் சந்தித்து அவர்கள் பிரச்னைக்குக் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் கூட்டணியில் இருப்பதால் எங்களால் அது முடியவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் முதலமைச்சர் சுறுசுறுப்புடனும் வெளிப்படைத் தன்மையுடனும் எளிதில் அணுகக் கூடியவராகவும் செயல்படுகிறார்” என்றார்.
முன்னதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் விமான நிலையத்திற்கு வரவே அங்குத் திரண்டிருந்த பா.ஜ.க-வினர் அண்ணாமலைக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர். அதே வேளையில் காங்கிரஸ் கட்சியினரும் எதிர் முழக்கங்களை எழுப்பியதால் இரு தரப்பினரிடையே முழக்க மோதல் உருவானதால் சில நிமிடங்கள் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.