பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருக்கிறது. இந்த நிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுமுடிவெடுக்காமல் வழக்கம் போல் அவர் தாமதித்து வருகிறார். துணை வேந்தர் நியமன மசோதா தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி தலைமைச் செயலருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதமும் எழுதியுள்ளார்.
இந்த மசோதா மூலம், துணைவேந்தர்களை இனி ஆளுநருக்கு பதில், தமிழக அரசே நியமிக்கும். இதுவரை ஆளுநரின் அதிகாரத்திற்கு கீழ் இருந்த துணை வேந்தர்கள் நியமனம் இனி மாநில அரசின் நேரடி அதிகாரத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவையில் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. துணை வேந்தர்கள் நியமன நடைமுறையில் ஆளுநரின் அதிகாரங்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதா முன்மொழிகிறது. பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநரின் அதிகாரத்தைக் குறைக்கும் இந்த மசோதாவை எதிர்த்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஆளுங்கட்சியின் பொம்மைகளை துணை வேந்தர்களாக்க இந்த மசோதா வழிசெய்யும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், தேடுதல் குழு பரிந்துரைக்கும் மூவரில் ஒருவரை மாநில அரசு நியமிக்கிறது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் தேடுதல் குழுவால் பரிந்துரைக்கப்படக்கூடிய மூவரில் ஒருவர் துணைவேந்தராக மாநில அரசின் ஒப்புதலோடு வேந்தரால் நியமிக்கப்படுகிறார். அந்த வகையில், தமிழ்நாடு, மேற்கு வங்கத்தை தொடர்ந்து துணை வேந்தர்கள் நியமன மசோதா கேரளாவிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.