இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்னெப் போதும் இல்லாத வகையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் மூன்றில் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்துக்கு இதுவரை 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. விளைநிலங்களில் பயிர்கள் அழிந்ததால் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பற்றாக்குறையும் அதனால் அவற்றின் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து உணவுப் பொருள் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் யோசனையை முதன்முதலில் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்நிலையில் மிஃப்தா இஸ்மாயில் நேற்று முன்தினம் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் இருந்து உணவுப் பொருட்கள் கொண்டுவர அனு மதிக்க வேண்டும் என ஒன்றுக்கும் மேற்பட்ட சர்வதேச அமைப்புகள் அரசை அணுகியுள்ளன. இது தொடர்பாக கூட்டணிக் கட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் கலந்து ஆலோசித்த பிறகு அரசு முடிவெடுக்கும்” என்று கூறியுள்ளார். அதேவேளையில் ஈரான், ஆப்கனில் இருந்து வெங்காயம் மற்றும் தக்காளி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.