இன்ஸ்டா கிளியை நம்பிப்போய் எலிவலையில் சிக்கிய காதல் ஏமாளி..! இப்படில்லாம் நடக்குமா.?

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான அழகிய பெண் ஒருவரின் அழைப்பை நம்பிச்சென்ற தொழிலதிபரை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பணம் மற்றும் நகைகளைப் பறித்த 6 பேர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் பவித்ரமான தம்பதி போல் காட்சியளிக்கும் இந்த இன்ஸ்டா ரீல்ஸ் ஜோடி தான் ரியலில் கேடி வேலை பார்த்து போலீசில் சிக்கி உள்ளது..

கேரள மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவு என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அந்த பெண் கணவர் கோகுல் துபாயில் இருப்பதாகவும், தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்..

அதை நம்பிய தொழிலதிபர், பாலக்காடு அருகே உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம்பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த 5பேர் கும்பல் தொழில் அதிபரை தாக்கி ஆபாச வீடியோ, மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளனர்.

தங்களுக்கு பணம் தராவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டிய அந்த கும்பல், கழுத்தில் கிடந்த 4சவரன் தங்க செயின் , செல்போன் , ஏடிஎம் கார்டு ,கார், பத்தாயிரம் பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு விரட்டி உள்ளது.

மேலும் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியதால், வீட்டிற்குச் சென்றால்தான் பணம் கொடுக்க முடியும் என தொழிலதிபர் கூறியுள்ளார். இதை அடுத்து அவரை காரில் ஏற்றி அந்த கும்பல் கொடுங்கல்லூருக்கு அழைத்து சென்ற போது வழியில் தொழிலதிபர் காரில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார்.

பாலக்காடு டவுன் தெற்கு காவல் நிலையத்திற்கு சென்ற தொழிலதிபர் நடந்த விவரங்களை விரிவாக கூறியுள்ளார். போலீசாரும் உடனடியாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி இன்ஸ்டா பிரபலம் கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவு உள்பட 6 பேரை கைது செய்தனர்.

இன்ஸ்டாவில் தன்னிடம் அறிமுகமாகும் நபர்களை ஆசைவார்த்தை கூறி நகை பணம் பறிப்பதை இந்த கும்பல் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.. விசாரணைக்கு பின் பாலக்காடு நீதிமன்றத்தில் ஆறு பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாழ்க்கை சிறையில் சிறகடித்து பறப்பது போல இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்த இந்த கேடி ஜோடி, தற்போது சிறகொடிந்த சில்வண்டுகளாக சிறையில் கம்பி எண்ணி வருகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.