இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) கீழ் வழங்குவதற்கு அதிகாரிகள் மட்டத்தில் உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், நிறைவேற்று குழு அங்கீகாரம் கிடைத்த பின்னர் 4 வருட காலத்திற்குள் இலங்கைக்கு இந்த நிதியுதவி கிடைக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி Peter Breuer and Masahiro Nozaki. தலைமையிலான சர்வதேச நாணய நிதியக் குழுவிற்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இன்று காலை (1) இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த மசாஹிரோ நோசாகி, அவரது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில், இலங்கைக்கு ஏனைய அமைப்புகளிடமிருந்து நிதி உதவி தொடர்பில் ஆதரவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மீளாய்வு மற்றும் நிர்வாகக் குழுவின் அனுமதியின் பின்னர் IMF இன் முதல் கட்ட உதவியினை வழங்க தயாராக இருப்பதாகவும் Masahiro Nozaki குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பில் உள்ள IMF தூதரகம், இலங்கையின் கடன் தற்போது தாங்க முடியாததாக மதிப்பிடப்பட்டுள்ளதால், கடன் மறுசீரமைப்பு தொடர்பான விஷயங்களைப் பற்றி ஆராய்வதற்கு கடன்கொடுத்தோருடன் கலந்துரையாட மாநாட்டை உடனடியாக நடத்துமாறு இலங்கைக்கு ஆலோசனைகளையும் வழங்கி உள்ளது.
அத்துடன் Peter Breuer கருத்து தெரிவிக்கையில், கடந்த ஜூன் மாதத்தில் தனது வருகையின் பின்னர் அரசியல் ஸ்திரத்தன்மை, சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இலங்iகின் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்தல், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மை பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் இலங்கையின் ஊழல்களனால் ஏற்படும் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பன இலங்கைக்கான புதிய நிதி ஆதரவு திட்டத்தின் நோக்கங்களாகும் எனவும் நிர்வாக மட்ட ஒப்பந்தத்தின் பின்னர் IMF தெரிவித்துள்ளது.