கொழும்பு: இலங்கையில் ஆளும் கட்சியை சேர்ந்த 12 எம்பி.க்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் எதிர்க்கட்சியில் சேர்ந்தனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால், அதிருப்தியடைந்த ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 எம்பிக்கள் தனியாக செயல்பட தொடங்கினர். மக்கள் போராட்டம் வலுத்ததால் பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அதிபராக இருந்த கோத்தபய நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்து அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில், கோத்தபய ஆதரவுடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து எதிர்கட்சி வேட்பாளராக டலஸ் அழகப்பெரும போட்டியிட்டார். ஆனால், ரணிலே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து கட்சிகள் அடங்கிய ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். ஆனால், கோத்தபயவுக்கு ஆதரவாக ரணில் செயல்படுவதாக குற்றம்சாட்டி அவருடன் இணைந்து செயல்பட, எதிர்க்கட்சியினர் மறுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், இலங்கையில் தற்போதுள்ள குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி, அந்த நாட்டின் உள்விவகாரங்களில் சீனா அதிகமாக தலையிட்டு வருகிறது. இதை தடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுத்து அண்டை நாடுகளிடம் இருந்து கடன் வாங்காத தேசமாக மாற்றவும் அனைத்து கட்சியினரும் ஒன்றியணைந்து செயல்படும்படி நேற்று முன்தினம் ரணில் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்பி.க்களான முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா மற்றும் நாலக கொடஹேவா உட்பட 12 பேர், சஜித் பிரேமதாசா தலைமையிலான சமகி ஜன பாலவேகயா கட்சியில் இணைந்தனர்.