மதுரை: ‘இளம் சாதனை மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்திலும் இந்தி வெறி நிலவுகிறது என்று மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறி இருப்பதாவது: கடந்த வருடம் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென வலியுறுத்தினேன்.
அப் பிரச்சினையில் ஒன்றிய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் “அடுத்த ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படும்” என உறுதி அளித்தது. இப்போது அந்த திட்டமே “இன்ஸ்பையர் சி” என்ற திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது என்பது தனிக்கதை. இன்னொரு புதிய கதைக்கு வருவோம். “செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதித் தேர்வு செப்.11ல் நடைபெறவுள்ளது. இது 9ம் வகுப்பு, 11ம் வகுப்பு பயிலும் இதர பிற்பட்டோர், கல்வி ரீதியாக பிற்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம் ஆகும்.
இந்த தேர்வுக்கான கேள்வித்தாள்களும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருக்கும் என “திட்ட தகவல் அறிக்கை” மற்றும் “பொது அறிவிக்கையில்’’ கூறப்பட்டுள்ளது. அடித்தள மாணவர்கள் பயன் பெற என ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு இந்தியிலும், ஆங்கிலத்திலும்தான் கேள்வித்தாள் தருவேன் என்பது என்ன நியாயம்? கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநில மாணவர்களோடு போட்டி போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம். அநீதி.
கடந்த ஆண்டு இதே போன்ற பிரச்சினையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தந்த வாக்குறுதி நினைவில் இருக்காதா? உங்கள் இந்தி வெறி தணியாதா? இல்லை இந்தி பேசாத மாநிலங்களின் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தவிக்கட்டும் என்று எண்ணுகிறீர்களா? ஒவ்வொரு பிரச்னைக்கும் போராடவும், நீதி மன்றத்திற்கு அலையவும் வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது.
மொழி உரிமை தொடர்பானது. எங்கள் குரல் சோராது! ஓயாது! தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென்று கேட்டு ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளேன்.