ஆன்லைனில் வெறும் 169 ரூபாய்க்கு சிலைகளை வாங்கி யாருக்கும் தெரியாமல் புதைத்துவைத்து, பின்னர் பூமியிலிருந்து சிலைகள் கிடைத்ததாக ஊர்மக்களை ஏமாற்றி பணம் பறித்த அப்பா மற்றும் மகன்களை போலீசார் கைதுசெய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலுள்ள மக்முத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவரும் இவருடைய மகன்களான ரவி மற்றும் விஜய் ஆகிய மூவரும் சேர்ந்துகொண்டு ஆன்லைனில் கடவுள் உருவ உலோக சிலைகளை ஆர்டர் செய்து வாங்கி அதை யாருக்கும் தெரியாமல் தங்கள் வயல் நிலத்தில் புதைத்துவிட்டனர். மறுநாள் தாங்கள் திட்டமிட்டதுபோலவே வயல் நிலத்தை உழுவது போல் தோண்டி, பூமிக்குள்ளிருந்து சிலைகள் கிடைத்திருப்பதாக ஊர் முழுவதும் பரப்பியிருக்கின்றனர். வயிலில் சிலைகள் இருந்தது எப்படி தெரியவந்தது என ஊர்மக்கள் கேள்வி எழுப்பியபோது, தனக்கு கனவு வந்ததாகவும் அதன்மூலம் சிலைகள் குறித்து தெரியவந்ததாகவும் கூறியிருக்கின்றனர். இதனை நம்பிய மக்கள்கூட்டம் சிலைகளைக் காண அங்கு குவிந்தது. இந்த அதிசயம் குறித்து பிரமித்த மக்கள் காணிக்கைகளை செலுத்த ஆரம்பித்தனர்.
அனைத்தும் தாங்கள் திட்டமிட்டதுபோலவே நடப்பதை பார்த்தும் அசோக் குமாரின் குடும்பத்தார் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைக்கவில்லை என்பது தான் அங்கு சோகம். சிலைகளை குறித்த மக்களின் பேச்சு போலீசார்வரை சென்றது. இதனையடுத்து அசோக் குமாரின் வீட்டிற்கு சென்ற போலீசார் சிலைகளை பார்த்தபோது அவை புத்தம் புதிதாக இருப்பதைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். எனவே அதுகுறித்து தொல்பொருள் துறைக்கு தகவல் அளித்தனர். அதற்குள் ஆன்லைன் வெப்சைட்டின் உள்ளூர் டெலிவரி நபரை வளையத்திற்குள் கொண்டுவந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் ரவி 169 ரூபாய்க்கு சிலைகளை ஆர்டர் செய்து வாங்கியது தெரியவந்தது.
உடனே அசோக் குமாரும் அவருடைய மகன்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பலமணி நேரம் விசாரணை நடத்தியதில், தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக ஆன்லைனில் சிலைகளை வாங்கி தங்கள் நிலத்தில் புதைத்து பின்னர் அதை வெளியே எடுத்து மக்களை நம்பவைத்த நாடகத்தை ஒத்துக்கொண்டனர். மேலும் இந்த சிலைகளை வைத்து ஊர்மக்களை நம்பவைத்து ஏமாற்றி கிட்டத்தட்ட ரூ. 30000 நிதி மற்றும் காணிக்கைகளை அவர்கள் வசூல் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM