ஜெனீவா,
சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் உலக வர்த்தக அமைப்பின் 12-வது மந்திரிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கடலில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன்பிடித்தலை கட்டுப்படுத்தி கடல் வளத்தை உறுதி செய்வது தொடர்பான உடன்பாடு எட்டப்பட்டது.
நீடித்த வளர்ச்சி இலக்கிற்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உடன்பாடாக கருதப்படுகிறது. மீன்பிடித்தல் சலுகை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீண்ட காலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து உலக வர்த்தக அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஷியாங்சென் சாங் விளக்கினார்.
மீன்பிடித்தல் சலுகைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்டு வரும் நிலையில், உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை. உறுப்பினர்களின் மாறுபட்ட கோரிக்கைகளே அதற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.
மேலும் இந்த 12-வது மந்திரிகள் மாநாட்டில் மீன்பிடித்தல் மானியங்கள் தொடர்பாக இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்த உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டனர்.