போபால்: காய்ச்சலுடன் வந்த 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வளர்ந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் என்னவோ வசதி படைத்தவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. கல்வி, மருத்துவத்திலும் கூட ஏழை, பணக்காரர்கள் என்ற பாரபட்சம் இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. பணம் இருந்தால் உங்களால் சிறந்த கல்வியையும், தரமான மருத்துவத்தையும் பெற்றுவிட முடியும். வசதி இல்லாதவர்களுக்கு இந்த இரண்டும் எப்போதுமே எட்டாக்கனிதான். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற செல்லும் ஏழை மக்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவே இன்றளவும் தொடர்கிறது. அப்படியொரு சம்பவம்தான் மத்திய பிரதேசத்தில் நடந்திருக்கிறது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பண்டாரே. இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு ரிஷி (5) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், ரிஷிக்கு கடந்த 4 நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைகளில் காண்பித்த போதும் ரிஷிக்கு காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து, குழந்தை ரிஷியை இன்று காலை ஜாபல்பூர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவர்கள் வர வேண்டிய நேரத்தை தாண்டி 2 மணிநேரமாகியும் மருத்துவர்கள் யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. செவிலியர்கள் கூட இல்லை.
இதனால் காய்ச்சல் அதிகமாகி ரிஷி மயங்கி இருக்கிறான். இதை பார்த்து பயந்து போன பெற்றோர், தண்ணீர் தெளித்து எழுப்பி இருக்கின்றனர். ஆனால் பின்னரும் முதலுதவிக்கு மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே ரிஷி உயிரிழந்துள்ளார். தங்கள் கண் முன்பே குழந்தை உயிரிழந்ததை கண்டு பெற்றோர் கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது.
இந்நிலையில், இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி தவறிழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட மருத்துவ அதிகாரி உறுதியளித்துள்ளார். என்ன நடவடிக்கை எடுத்தாலும் உயிரிழந்த குழந்தையின் உயிர் வந்துவிடுமா என்ன?