திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல், திமுகவினர் எங்கள் கட்சியில் இணைகிறார்கள் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, “மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
கோவை காந்திபுரம் 48ஆவது வார்டில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக கவனம் செலுத்தி வருகிறோம். சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அத்தொகுதிகளில் உள்ள 10 முக்கிய கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்குமாறு முதலமைச்சர் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெற்கு தொகுதிக்குள்பட்ட 10 முக்கிய பிரச்சனைகளை அளிக்க இருக்கிறேன்.
குறிப்பாக மழையினால் சேதம் அடைந்த பகுதிகளான லங்கா கார்னர் அவிநாசி மேம்பாலம் ஆகிய இடங்களும் குறிப்பிடுவேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்காதது குறித்து பேசிய அவர், “கட்சியின் தலைவராக ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறவில்லை என்றாலும் மாநிலத்தின் முதலமைச்சராக அவர் வாழ்த்து தெரிவித்திருக்க வேண்டும்.
மு.க. ஸ்டாலின் இந்து பண்டிகைகளுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்காமல் உள்ளார்” என்று குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, “பொள்ளாச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் பாஜகவினர் திமுகவில் இணைந்தனரே என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “திமுகவில் மாற்றுக் கட்சியினர் இணைவது போல எங்கள் கட்சியிலும் திமுகவிலிருந்து பலரும் இணைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”