சென்னை: கனமழை காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தனர்.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று ஆகஸ்ட் 1-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
2-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
3 மற்றும் 4-ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில்,ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வைகையில் வெள்ளப் பெருக்கு: வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தேனி கும்பக்கரை அருவியில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.