கர்நாடகா: மடாதிபதி மீது பாலியல் புகார் – 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கர்நாடகா: மடாதிபதி மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில், 7 நாட்களுக்கு அறிக்கை தாக்கல் செய்ய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகத்தில் பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூர்த்தி முருகா சரணரு. இந்த மடத்தின் சார்பில் தங்கும் விடுதியுடன் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மடத்தின் பள்ளியில் தங்கி படித்து வந்த 15 மற்றும் 16 வயதுடைய 2 மாணவிகளை மடாதிபதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
image
இந்த புகாரின் பேரில் மைசூர் நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அக்கமாதேவி, வார்டன் ரஷ்மி, பசவநித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த பாலியல் வழக்கு சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு உள்பட 5 பேர் மீது சித்ரதுர்கா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தப்பியோடியதாக கூறப்பட்ட சிவமூர்த்தி முருக சரணரு சித்ரதுர்காவில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணைக்கு ஆஜராகி தன் மீதான பாலியல் வழக்கு குறித்து போலீசாரிடம் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.
image
இதையடுத்து போலீசார், அவரை கைது செய்யாமல் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த நிலையில் மடாதிபதி மீது பாலியல் புகார் கூறிய 2 மாணவிகள் நேற்று சித்ரதுர்கா முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திட்ரேட் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்களது வாக்குமூலம் ரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்), சிவமூர்த்தி முருக சரணருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்ட வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிடக்கூடாது என்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கோரியுள்ளது. இதைத் தொடர்ந்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.