சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலை பணிக்கு வரும்பொழுது, மது போதையில் தள்ளாடி கொண்டு வந்த நிலையில், அவரை பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் காவல் நிலையத்திற்கு பத்திரமாக அழைத்துச் சென்றுள்ளார்.
காசிமேடு N4 போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக சற்குணம் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இரண்டு நாட்களாக பணிக்கு வரவில்லை. இன்று காலை 9 மணி அளவில் பணிக்கு கிளம்பி வரும் பொழுது, வழியில் அவர் கள்ள சந்தையில் வாங்கி மது அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், அவருக்கு போதை தலைக்கேறிய நிலையில் தனது புல்லட் வாகனத்தை நகர்த்த கூட முடியாத நிலையில் தள்ளாடியுள்ளார். அப்பொழுது இதை பார்த்துக் கொண்டிருந்த பஞ்சர் கடை ஊழியர் ஒருவர் அவரை மீட்டு பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், சற்குணத்திற்கு மேல் அதிகாரிகள் விடுமுறை கொடுத்து ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.