அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கி விவசாயி இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாடு, ஆடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டம் மல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி அன்பரசன். அவரது வயலில் நடவு வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வாங்கிக் கொண்டு சென்றுள்ளார் அன்பரசன். அப்போது, இடி மின்னலுடன் பெய்த மழையின் காரணமாக (வயல்) வரப்பில் நடந்து செல்லும் வழியிலேயே மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அன்பரசன் உயிரிழந்தார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, செந்துறை அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மாலைமணி. இவர், ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் இவர்கள் இரண்டு பேரும் ஈச்சங்காடு ஏரிக்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது,
திடீரென மின்னல் தாக்கியதில் மாலைமணி சம்பவ இடத்திலேயே உடல் கருகிப் பலியானார். அருகே இருந்த செல்வராஜ் படுகாயம் அடைந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ஆண்டிமடம் அருகேயுள்ள காட்டாத்தூர் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் புஷ்பராயன். அவருக்குச் சொந்தமான வயல் வெளியில் மாடு மேய்ந்து கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் என்பவருக்குச் சொந்தமான வயலில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் இரண்டு ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதுகுறித்து ஆண்டிமடம் கால்நடைத் துறையினர் மற்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.