இந்திய வர்த்தகர் ஒருவர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஏற்றுமதி செய்ய முயன்ற 6 கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான பழைய உலோகப் பொருட்கள் அடங்கிய 10, கொள்கலன்கள் இலங்கை சுங்க மத்திய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.
அந்த பத்து கொள்கலன்களில் இருந்து 140 மெற்றிக் டொன் பித்தளைப் பொருட்கள், அலுமினியம் மற்றும் இரும்புப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அவற்றில் 140 மெற்றிக் டொன் இயற்கை ரப்பர் உள்ளதாக இலங்கை சுங்கத்திற்கு சமர்ப்பித்த சுங்கப் பிரகடனத்தில் ஏற்றுமதியாளர் தெரிவித்துள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டவிரோத ஏற்றுமதி தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்க மத்திய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் இறுதியில் அந்த உலோகப் பொருட்கள் அரசுடமையாக்கப்பட்டு சந்தேக நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் சுங்கத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.