அருகியம் பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம்: ஆபத்தை உணராமல் மலைகிராம மக்கள் வெள்ளநீரில் நடந்து செல்கின்றனர்.
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு சத்தியமங்கலம், கடம்பூர் சென்று வருகின்றனர். இந்நிலையில், கடம்பூர் மற்றும் மாக்கம்பாளையம் இடையே குரும்பூர், அருகியம் ஆகிய இரு பள்ளங்கள் ஓடுவதால் வெள்ளம் வடிந்த பிறகு பள்ளங்களை கடந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சில தினங்களாக பெய்த கன மழையால் குரும்பூர் மற்றும் அருகியம் பள்ளத்தில் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக உருவெடுத்து ஆர்ப்பரித்துச் சென்றது. இதன் காரணமாக பள்ளத்தில் சேறும் சகதியும் நிறைந்து காணப்பட்டதால் வாகனங்கள் சேற்றில் சிக்கி ஆபத்து நேரிடுகிறது.
இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்குச் செல்லும் அரசு பேருந்து கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டது. பேருந்து ரத்து செய்யப்பட்டதாலும் வாகனங்கள் செல்லமுடியாத நிலையில் மாக்கம்பாளையம் செல்லும் கிராம மக்கள் குழந்தைகளுடன் ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தில் நடந்து மறு கரை சேர்ந்தனர்.
தற்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுதவதால் பொதுமக்கள் காட்டாற்றை கடக்க வேண்டாம் என வனத்துறை எச்சரித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
