விழுப்புரம்: தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணை நடக்கும் விழுப்புரம் நீதிமன்றத்தில் முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாக ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக முன்னாள் சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் ஆகியோர் மீது விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை முடிந்த நிலையில், அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் சிறப்பு டிஜிபி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ் அப் மெசேஜ் பதிவுகள், செல்போன் அழைப்பு பதிவுகள் உள்ளிட்ட சிபிசிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த முக்கிய ஆவணங்களை நீதிபதி புஷ்பராணி கேட்டுள்ளார். அப்போது அந்த ஆவணங்கள் வேறு இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த ஆவணங்களை தேடி கண்டுபிடிக்குமாறு ஊழியர்களுக்கும், அந்த ஆவணங்களின் மற்றொரு நகல்களை அடுத்த வழக்கு விசாரணையின்போது சமர்ப்பிக்கும்படி சிபிசிஐடி போலீசாருக்கும் உத்தரவிட்டார்.
வேறு இடத்தில் மாற்றி வைக்கப்பட்ட ஆவணங்களில் 4 ஆவணங்கள் கிடைக்க பெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் ஒரு சில ஆவணங்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 29ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாயமான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதா? என நீதிபதி புஷ்பராணி கேள்வி எழுப்பியதற்கு இதுவரை ஆவணங்கள் கிடைக்கவில்லை, தேடிக் கொண்டிருப்பதாக நீதிமன்ற ஊழியர்கள் பதிலளித்தனர்.இதனால் அதிருப்தியடைந்த நீதிபதி புஷ்பராணி, முக்கிய ஆவணங்கள் மாயமான விவகாரம் தொடர்பாகவும், கவனக்குறைவாக செயல்பட்டதற்காகவும் நீதிமன்ற ஊழியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளார்.மேலும் ஆவணங்கள் மாயமானது தொடர்பான தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படியும், இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அறிவிப்பு கொடுத்து மாயமான ஆவணங்களின் மற்றொரு நகல்களை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.