சென்னை: “கனடா மாநாட்டில் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியை நாடாளுமன்ற சபாநாயகர் உள்பட அனைவரும் ஏந்திச் சென்றது எல்லோருக்குமே ஒரு வேதனையான விஷயம்தான்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
கனடாவில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இன்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சீனாவிலிருந்து இந்திய தேசியக் கொடியை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வெளிவந்த செய்திகள் மூலம் நாங்கள் தெரிந்துகொண்டோம். அந்த அடிப்படையில்தான் சீனாவில் இருந்து கொடிகள் இறக்குமதி செய்யப்பட்டது.
நம்முடைய இந்திய தேசிய கொடியை சீனாவில் இருந்து தயாரித்து, அதை நாடாளுமன்ற சபாநாயகர்களும், தமிழகத்தில் இருந்து கனடாவுக்கு சென்ற நானும் கையில் ஏந்திச் சென்றது எல்லோருக்குமே ஒரு வேதனையான விஷயம்தான். தேசியக் கொடியைக் கூட சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதும் சற்று வேதனைக்குரிய விஷயம்தான் என்று எண்ணுகிறேன்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆக.22 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழகத்தின் பிரதிநிதியாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டார். நாடாளுமனற சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பல்வேறு மாநிலங்களின் சபாநாயர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். அங்கு நடந்த அணிவகுப்பின்போது சபாநாயகர்கள் ஏந்திச் சென்ற தேசிய கொடியில் “மேட் இன் சீனா” என்ற வாசகம் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.