வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :’சீன நிறுவனங்கள் தயாரிக்கும், 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான மதிப்புடைய, ‘மொபைல் போன்’களை இந்தியாவில் விற்பனை செய்ய தடை விதிக்கும் எண்ணமில்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின், ‘மொபைல் போன்’ செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதே போல சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
வரி ஏய்ப்பு செய்ததற்காக, ‘ஓப்போ, ஜியோமி’ ஆகிய சீன நிறுவன அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இந்நிலையில், உள்நாட்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையை உயர்த்துவதற்காக, 12 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய சீன மொபைல் போன்களை இந்தியாவில் விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதாவது: மொபைல் போன் விற்பனையில் உள்நாட்டு நிறுவனங்கள் பெரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் வாயிலாக, அதை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை. இது தவறான தகவல்.
12 ஆயிரம் ரூபாய்க்கு குறைந்த மதிப்புடைய சீன மொபைல் போன்கள் விற்பனைக்கு தடை விதிக்கும் எண்ணமில்லை. அதே நேரம், இங்கு தயாரிக்கப்படும் சீன மொபைல் போன்களின் ஏற்றுமதியை அதிகரிக்குமாறு அந்நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement