Pirandai Thuvaiyal recipe in tamil: பிரண்டை மிகச்சிறந்த மூலிகைகளுள் ஒன்றாக உள்ளது. இவற்றுக்கு ‘வஜ்ஜிரவல்லி’ என்கிற பெயரும் உண்டு. கொடி வகையைச் சேர்ந்த இவை, இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக் காணப்படுகிறது. இவை பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடியவையாக உள்ளன. இவற்றின் சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன.
பிரண்டையில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது. இவை அடிபட்ட வீக்கம், சுளுக்கு, பிடிப்பு, வலி போன்றவற்றுக்கு இது சிறந்த நிவாரணம் தரக்கூடியதாகவும் உள்ளன. இந்த அற்புத மூலிகையை துவையல் செய்து சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
அவ்வகையில், பிரண்டை துவையல் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஞாபகசக்தியை பெருக்குகிறது. மூளை நரம்புகளை பலப்படுத்துகிறது. எலும்புகளுக்கு சக்தி தருகிறது. மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை நிறுத்துவதுடன் வாய்வுப் பிடிப்பைப் போக்குகிறது. இவற்றை வாரத்தில் இரண்டு நாள் வீதம் சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும் மற்றும் உடல் வனப்பும் பெறும்.
இப்படியாக ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள பிரண்டையில் டேஸ்டி துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
பிரண்டை துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:
பிரண்டை – 1 கட்டு
உளுத்தம்பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 1 துண்டு
காய்ந்த மிளகாய் – 5 முதல் 6
தேங்காய் – 1 துண்டு
புளி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் டேபிள் ஸ்பூன்
பிரண்டை துவையல் தயார் செய்யத் செய்முறை:
முதலில் பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதன்பின், ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து அவற்றுடன் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும்.
அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும்.
பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இவற்றின் சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
இப்போது சுவையான மற்றும் சத்தான பிரண்டை துவையல் தயாராக இருக்கும். அவற்றை உங்களுக்கு பிடித்த உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil