சென்னையில் இந்த முறை எவ்வளவு வெள்ளம் வந்தாலும் மக்களை பாதிக்காது: கே.என் நேரு உறுதி

மேட்டூரில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுவதால், திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வரும் நீர் 1 லட்சம் கன அடியை தாண்டியதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரியாற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும் போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகையை தொடங்கி வைத்து பார்வையிட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடையவில்லை என்றார்.

மேலும், சென்னையில் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையை வெள்ளம் பாதிக்காத வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டது. திருப்புகழ் கமிட்டி பரிந்துரை செய்த படி ரூ. 935 கோடியில் எல்லா இடங்களிலும் பணிகள் நடந்து வருகின்றன.

குறித்த காலத்துக்குள் பணிகள் பூர்த்தியடையாமல் இருப்பதற்கு காரணம் மின் வயர்கள், டெலிபோன் வயர்கள், பாதாள சாக்கடை பைப்புகள், மெட்ரோ வாட்டர் பைப்புகள் புதைக்கப்பட்டுள்ளன. மேலும், மின் கம்பங்களும், மரங்களும் இருக்கின்றன. இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து விட்டு தான் வடிகால் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

இதற்கிடையே போக்குவரத்துக்கு சங்கடங்கள் ஏற்படும் என்பதால் சில இடங்களில் சாலையை துண்டிக்க முடியாத நிலை இருக்கிறது. இருப்பினும் ஒப்பந்ததாரர்களை முதலமைச்சரும், நானும் பணிகளை வேகப்படுத்த சொல்லி இருக்கிறோம். இப்போது பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மோட்டார் உள்ளிட்ட வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த முறை நிறைய வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளம் பாதிக்காது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும்இதனை முன்னின்று கவனித்து வருகிறார்கள்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள சாலைகளை அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தார் போட்டால் பிடிக்காது. அதுமட்டுமல்லாமல் 40, 50 ஆண்டுகால குடிநீர் குழாய்களை மாற்ற வேண்டி இருக்கிறது. பாதாள சாக்கடை குழாய்கள், குடிநீர் குழாய்கள் பதிக்காமல் சாலையை போட்டாலும் வீணாகிவிடும். தற்போதைய நிலையில் 576 சாலைகளில் 276 சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த சந்திப்பின்போது மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.