சென்னையில் தொடர் மழை எதிரொலி.! மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க ஆணையர் உத்தரவு.!

சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. மழைக்காலம் வந்து விட்டாலே சென்னையில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடும். சில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீர் புகுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகுகின்றனர்.

இந்நிலையில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64க்குட்பட்ட வீனஸ் நகர் முதல் பிரதான சாலை மற்றும் 200 அடி சாலை, டெம்பிள் பள்ளி சந்திப்பில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-65க்குட்பட்ட பூம்புகார் நகர் 5வது தெரு மற்றும் முதல் பிரதான சாலை, கொளத்தூர் பிரதான சாலை (கிழக்கு மற்றும் தெற்கு மாதா தெரு) மற்றும் பேப்பர்மில்ஸ் சாலை (லட்சுமி அம்மன் கோயில் சந்திப்பு மற்றும் வேலவன் நகர் சந்திப்பு) ஆகிய பகுதிகளில் ரூ.7.92 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-66க்குட்பட்ட வேலவன் நகர் பிரதான சாலை, குமரன் நகர் 80 அடி சாலை மற்றும் தணிக்காசலம் கால்வாய் பகுதிகளில் ரூ.5.58 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், வார்டு-68க்குட்பட்ட ஜகநாதன் சாலை மற்றும் எம்.எச். சாலை பகுதியில் ரூ.6.28 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-67க்குட்பட்ட பேப்பர் மில்ஸ் சாலை குறுக்கே மற்றும் எஸ்.ஆர்.பி. கோயில் வடக்கு பகுதியில் ரூ.13.20 கோடி மதிப்பீட்டிலும் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேற்கண்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை உடனடியாக முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மண்டலக்குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார் அவர்கள், மத்திய வட்டார துணை ஆணையாளர் திரு.எஸ்.ஷேக் அப்துல் ரஹ்மான், மாமன்ற உறுப்பினர்கள் திரு.எ. நாகராஜன், திருமதி கு. சாரதா, திருமதி யோக பிரியா, திருமதி பி. அமுதா, திருமதி எம். தாவூத் பீ அவர்கள் உட்பட பலர் உடனிருந்தனர் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.