தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சியாக தற்போது தேர்வுசெய்யப்பட்டு முதல்வர் கரங்களில் விருது பெற்ற சேலம் மாநகராட்சியில், அதிகாரிகளுக்கிடையேயும், அரசியல்வாதிகளுக்கு மத்தியிலும் பெரும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.
தி.மு.க தனது கூட்டணிக் கட்சிகளுக்கு சில இடங்களில் மேயர் பதவிகளையும், பெரும்பாலான இடங்களில் துணை மேயர் அந்தஸ்தையும் கொடுத்திருக்கிறது. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் துணை மேயர் பதவியை தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கியிருக்கிறது தி.மு.க. அதன் மூலம் சேலம் மாநகராட்சியின் துணை மேயராக இருந்து வருபவர் சாரதாதேவி. தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் ராமச்சந்திரனுக்கும், துணை மேயர் சாரதாதேவிக்கும் முட்டலும், மோதலுமாக இருந்து வருவதாக மாநகராட்சி வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.
மேலும், மேயர் கலந்துகொள்ளும் மாநகராட்சி நிகழ்ச்சிகளுக்கு துணை மேயருக்கு அழைப்பு விடுப்பதில்லை என்றும், துணை மேயருக்கு வழங்கப்படக்கூடிய அதிகாரங்கள் அனைத்தும் தட்டி பறித்துவிட்டதாகவும், இதனால் துணை மேயரை டம்மியாக மேயர் வைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பல தினந்தினம் வெடித்து வருகிறது.
துணை மேயர் சாரதாதேவியும், தான் படித்தவர் என்றும் தனக்கும் எல்லாம் தெரியும் என்று வலம் வருவதால், மாநகராட்சி கூட்டங்களில் இவர்களது பிரச்னைகளை சரி செய்வதற்கே அதிகாரிகளுக்கு பெரும்பாடாக இருந்து வருகிறது.
கடந்த 4 மாதத்திற்கு முன் துணை மேயர் சாரதாதேவி மாமன்ற கூட்டங்களில் தொடர்ந்து தான் கீழே அமர வைக்கப்பட்டிருப்பதாகவும், மாநகராட்சி நிர்வாகம் தன்னை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார். அதனடிப்படையில் துணை மேயர், மேயருக்கு அருகில் நாற்காலியில் அமர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமர வைக்கப்பட்டார்.
இதனால் கோபத்தின் எல்லைக்கு மேயர் ராமச்சந்திரன் சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சமீபத்தில் நடைப்பெற்ற மாமன்ற கூட்டத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த கவுன்சிலர்களிடம் எந்தவித அறிவிப்பும் இன்றி கையெழுத்து வாங்கியுள்ளாராம் மேயர் ராமச்சந்திரன். அதன்மூலம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்து துணை மேயரை பதவி நீக்கம் செய்ய திட்டம் வகுத்ததாகவும், இந்த தகவல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்,நேருவின் காதுக்கு செல்ல மேயரை அழைத்துப்பேசி அதனை தடுத்து நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி துணை மேயர் சாரதாதேவியிடம் பேசியபோது, “இந்த தகவல் என்னுடைய காதுக்கும் வந்தது. இதுதொடர்பாக நான் யாரிடமும் கேட்கவில்லை. கூட்டணி தர்மத்தை நிலைநாட்டிவரும் தி.மு.க., அரசு இதுப்போன்ற செயல்களில் ஒருபோதும் ஈடுப்படுவதற்கு வாய்ப்பில்லை என நம்புகிறேன்” என்றார்.
மேலும் துணை மேயரை நீக்குவதற்காக கையெழுத்து வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “கையெழுத்து பெற்றது உண்மை தான். ஆனால் தலைமையின் உத்தரவு இல்லாமல் பதவி நீக்கம் செய்ய முடியாது. துணை மேயரின் செயல்பாடுகள் மேயரான எனது பணியை தடுத்து நிறுத்துகிறது. எதற்கு பாத்தாலும் மேயருடன் போட்டி போடுகிறார். அதனால் ஒரு வார்னிங்காக அதுமாதிரி கையெழுத்து வாங்கப்பட்டது’ என்றார்.