மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபரும், அமெரிக்கா உடனான பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மிகைல் கார்பசேவ் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1917ம் ஆண்டில் நடந்த ரஷ்ய புரட்சியின் மூலம், உலகின் மாபெரும் சக்தியாக மிகப்பெரிய பிரதேசமாக சோவியத் யூனியன் உருவானது. இதில் 15 நாடுகள் உறுப்பினர்களாக ஒன்றுபட்டு இருந்தன. கம்யூனிஸ்ட் நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகித்த சோவியத் யூனியன், உலகின் மிக சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்தது. அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் மிகவும் தவித்து வந்தனர். அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையே, உலகின் பலசாலி யார் என்ற பனிப்போர் பல ஆண்டுகளாக நீடித்தது.
இத்தகைய காலக்கட்டத்தில் 1985ம் ஆண்டு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோவியத் யூனியனின் அதிபராகவும் பதவி ஏற்றார் மிகைல் கார்பசேவ். கட்டுப்பாடுகளால் மூச்சுத் திணறி வந்த சோவியத் மக்களை சுதந்திர காற்றை சுவாசிக்க வைத்தார். மேலும், அமெரிக்கா உடனான பனிப்போரையும் முடிவுக்கு கொண்டு வந்தார். கார்பசேவின் கொள்கைகள் காரணமாக, சோவியத் யூனியன் பிரிந்தது. ரஷ்யா தனி நாடாக உருவானது. உக்ரைன் உள்ளிட்ட 15 நாடுகள் சுதந்திரம் பெற்று தனி நாடுகளாகின. இதன் மூலம், உலகில் அமைதி உருவாக காரணமாக இருந்தார். அதே சமயம், சோவியத் யூனியனை பிரித்ததற்காக இவர் மீது ரஷ்யாவில் சில தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கார்பசேவ், மாஸ்கோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. அவரது மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வல்லரசுகளின் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வந்ததற்காக இவருக்கு 1990ம் ஆண்டு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது.