திருச்சி: டெல்டாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 17,000 ஏக்கர் குறுவை பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. அரியலூரில் மின்னல் தாக்கி 2 பேர் இறந்தனர். நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் பரவலாக நேற்று காலை முதல் மாலை 5 மணி வரை பலத்த மழை பெய்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல் மற்றும் நன்னிலத்தில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை இடைவிடாமல் தொடர் மழை பெய்தது. தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை மாவட்டங்களில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பொழிந்தது. சில இடங்களில் இரவிலும் மழை பொழிந்தது. பெரம்பலூர் மாவட்ட மேற்கு எல்லையான பச்சைமலை தொடர்ச்சியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே உள்ள மலையிலிருந்து உற்பாத்தியாகும் கல்லாற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று பகலிலும் மிதமான மழை நீடித்தது. திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு வரை பலத்த மழை நீடித்தது. அரியலூர் மாவட்டம் மல்லூரை சேர்ந்த விவசாயி அன்பரசன்(40). இவர் தனது வயலில் நடவு வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு உணவு வாங்கி கொண்டு ன் நேற்று மதியம் சென்றார். அப்போது திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி அன்பரசன் உடல் கருகி பலியானார்.
செந்துறை அருகே உள்ள தளவாய் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மாலைமணி(45). ஈச்சங்காட்டை சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர்கள் 2 பேரும் ஈச்சங்காடு ஏரிக்கரையில் நேற்று மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாலைமணி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். செல்வராஜ் படுகாயமடைந்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல், வள்ளுவக்குடி, நிம்மேலி, அகணி, ஆதமங்கலம், பெருமங்கலம், கதிராமங்கலம் மருதங்குடி, கொட்டாயமேடு, வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை சாகுபடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 7,000 ஏக்கர் குறுவை சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
அதேபோல், மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், மதுக்கூர், கும்பகோணம் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.