தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள 20 சுங்கச் சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 460க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கக்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 53 சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஆண்டுக்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.
கட்டணம் வசூலிக்கும் பணியில், தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, 15 ஆண்டுகள் வரை அல்லது சாலை அமைத்ததற்கான முதலீட்டை திரும்ப பெறும் வரை மட்டுமே, கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆண்டுக்கு 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் பல சுங்கச்சாவடிகளில் முதலீட்டை திரும்ப பெற்றும், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் புதிதாக சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், 15 ஆண்டுகளை கடந்தும் பல சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. இதற்கு, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கண்டுகொள்வதில்லை.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மீதமுள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 20 சுங்கச்சாவடிகள் இந்த பட்டியலில் வருகின்றன.
கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வகை வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் இரண்டாயிரத்து 660 ரூபாயில் இருந்து, மூவாயிரத்து 45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் பேருந்துகள், பல அச்சு வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.