மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தார். அவரது உடல் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வந்தபோது அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். பின்னர் விமான நிலையத்திலிருந்து அமைச்சர் புறப்பட்ட போது அவரின் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் பாஜகவினர் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மகளிரணியைச் சேர்ந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த 11 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன் ஆகிய இருவரும் தொலைபேசியில் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஆடியோ தொடர்பாக சுசீந்திரன் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இந்தநிலையில், நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்த ஆட்டின் (சிம்பிள்) பெயரைகூட நான் குறிப்பிட விரும்பவில்லை” என்று பதிவிட்டு, “தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலணி வீச ஏற்பாடு செய்வது, அவதூறு பரப்புவது, அப்பட்டமாக பொய் பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு” என்று குறிப்பிட்டு அண்ணாமலை தொடர்புடைய சில செய்தித்தாள் படங்களையும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலையும் காட்டமாக பதிலளித்து ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதில், “மிஸ்டர் பிடிஆர், முன்னோர்களின் இன்ஷியலை பயன்படுத்தி மட்டுமே வாழும் உங்களுக்கும், உங்கள் கூட்டாளிகள் போன்றவர்களுக்கு ஒரு விவசாயியின் மகன் வளர்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெரிய பரம்பரையில் பிறந்தவர் என்பதை தவிர வேறு என்ன பயனுள்ளதைச் செய்திருக்கிறீர்கள்? நீங்கள் தான் அரசியலுக்கும் எங்கள் மாநிலத்துக்கும் சாபக்கேடு. என் காலணிகளுக்கு கூட நிகரில்லை”
எனக் குறிப்பிட்டுள்ளார். பழனிவேல் தியாகராஜன் மற்றும் அண்ணாமலையின் இந்த ட்விட்டர் பதிவுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil