சென்னை: சமீபத்தில் வெளியான படம் படுதோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணமே அந்த படத்தின் இயக்குநர் தான் என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நியூமராலஜியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு எதையுமே மாற்ற மாட்டேன் என கடைசி வரை அடம்பிடித்தது தான் இப்படி கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் என்கின்றனர்.
சொன்ன பட்ஜெட்டை தாண்டி அதிக செலவுகளை இழுத்து விட்டது மட்டுமின்றி ஒட்டுமொத்த உழைப்பையும் அவர் வீணடித்து விட்டார் என தயாரிப்பு தரப்பு புலம்பி வருகிறதாம்.
அதிக செலவு
படம் நல்லா இருந்தாலே தியேட்டருக்கு வர ரசிகர்கள் இப்போ ரொம்பவே யோசிக்கிறாங்க. பார்க்கிங் டிக்கெட்டே 50 ரூபாய்க்கு மேல, பாப்கார்ன் விலை 250 ரூபாய்க்கு மேல தண்ணீர் பாட்டில் கெட்ட கேட்டுக்கு 80 ரூபாய், டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்தால் எக்ஸ்ட்ரா சார்ஜ் என ஒரு படத்தை குடும்பத்துடன் பார்க்க வேண்டுமென்றால் அதிக செலவாகிறது. அதையும் பொருட்படுத்தி படத்தை ஜாலியாக பார்க்க வரும் ரசிகர்களுக்கு அங்கேயும் என்டர்டெயின்மென்ட்டுக்கு பதிலாக தலைவலி கிடைத்தால் என்ன செய்வார்கள்.
வாஷ் அவுட்
அடுத்த நாளே அந்த படமா அய்யோ வேண்டாம் என அவர்கள் பட்ட கஷ்டத்தை புலம்பி நண்பர்களையும் சொந்தங்களையும் தியேட்டருக்கு போக விடாமல் செய்து விடுகின்றனர். இதனால் தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வெளியானால் இரண்டாவது நாளே பல படங்கள் வாஷ் அவுட் ஆகி விடுகின்றன. சமீபத்தில் வெளியான அந்த படமும் பாம்பு பட்டாசாக புஷ் ஆகி விட்டது.
தயாரிப்பாளர் சொல்லியும்
ஏற்கனவே படத்தை முழுவதும் பார்த்து முடிக்காமல் பாதியிலேயே கொட்டாவி விட்ட அந்த தயாரிப்பாளர் ரொம்ப லெந்தா இருக்கு கொஞ்சம் குறைச்சிக்கலாமே என கெஞ்சியும் அந்த படத்தின் இயக்குநர் ஒரு செகண்ட் குறைச்சாலும் என் படம் மொத்தமும் காலி என மிரட்டியதால் தான் தயாரிப்பாளர் அமைதி காத்தாராம். ஆனால், இப்போ அவர் போட்ட பணமே காலியாகி விட்டதே என பெரும் புலம்பலில் இயக்குநர் மீது அனைத்து கோபத்தையும் கொட்டித் தீர்த்து இருக்கிறார்.
நியூமராலஜி நம்பிக்கை
இயக்குநருக்கு நியூமராலஜி மீது இருந்த நம்பிக்கைத் தான் இப்படியொரு படத்தையே எடுக்கத் தூண்டியதாம். கடைசியில் அந்த நியூமராலஜி நம்பிக்கையே படத்திற்கு பெரும் ஆபத்தாக அமைந்து விட்டதாக பேச்சுக்கள் கோடம்பாக்கம் முழுவதும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
எடிட் பண்ணி இவ்ளோ
ஒரு படத்தை எடுக்கிறேன் என கமிட் செய்து விட்டு இரண்டு படங்கள் எடுக்கும் அளவுக்கு ஏகப்பட்ட நடிகர்களின் கால்ஷீட்களையும் படத்தின் பட்ஜெட்டையும் இஷ்டத்துக்கு அதிகரித்து இருக்கிறார் அந்த இயக்குநர். எடிட் பண்ணியே இவ்ளோ பெரிய படமாக வந்துள்ள நிலையில், எடிட் பண்ணாத காட்சிகளை வைத்து இன்னொரு படத்தையே கொடுக்கலாம் என புலம்பி வருகின்றனர்.
அடுத்த படத்துக்கும் அடி
இந்த படத்தின் பிசினஸ் லாஸ் ஆவது மட்டுமின்றி அந்த நடிகர் நடித்த அடுத்த படத்துக்கும் இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் படத்தை வாங்கவே பயப்பட ஆரம்பித்து விட்டதாக பரபரப்பு கிளம்பி உள்ளது. பொய்யாக விளம்பரம் செய்தாலும் விளம்பரமே செய்யவில்லை என்றாலும் நல்ல படங்கள் ஓடும் அதற்கு ரசிகர்கள் ஆதரவு எப்போதுமே இருக்கு என ரசிகர்கள் நிரூபித்து வந்தாலும், சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என இயக்குநர்கள் சொதப்பி வருவதையும் தவிர்க்க முடியவில்லை.