திமுகவில் சரியாக செயல்படாத மாவட்டச் செயலாளர்களை மாற்றிவிட்டு இளம் ரத்தத்தை பாய்ச்சும் பணி திட்டமிடப்பட்டு வருவதாக, நீண்ட நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த மாற்றம் தகவல் வெளியானதில் இருந்தே
மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பும், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பான சூழலும் நிலவி வருகிறது.
மேலும், திமுக தலைவர்
மேற்கொள்ளும் இந்த ஆபரேஷனில் சிக்கி விடக் கூடாது என்பதற்காக, மாவட்ட செயலாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு திமுக தலைமையின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
அதே சமயம் தமிழகம் முழுவதும் மாற்ற வேண்டிய மாவட்டச் செயலாளர்கள் யார்? என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை வந்தும் கூட அதை திறந்து பார்க்காத திமுக தலைமை மாற்று முறையையும் கையாண்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு உளவுத்துறை வாயிலாக திமுக மாவட்ட செயலாளர்கள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இரு அறிக்கையிலும் இடம் பிடித்தவர்கள் யார்? என பார்த்தபோது 4 மாவட்ட செயலாளர்கள் சிக்கியதாகவும், முதலில் இந்த 4 மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு அடுத்த கட்டமாக மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் திமுக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த பட்டியல்படி தென்காசி, நீலகிரி, நாகப்பட்டினம் மற்றும் சென்னை என 4 மாவட்ட செயலாளர்களுக்கு முதலில் கல்தா கொடுக்கப்படலாம் என உடன் பிறப்புகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் முன்பு இருந்ததை விடவும், தற்போது வலுவாக உள்ளது. தமிழக மக்கள் அளித்து உள்ள அங்கீகாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
இதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் சரியாக செயல்படாதவர்கள், மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்தவர்கள், குற்ற வழக்குகள் மற்றும் விமர்சனங்களில் சிக்குபவர்கள் என பார்த்து பார்த்து களையெடுக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது.
இதில் யார் சிக்கினாலும் பதவி இழக்க போவது உறுதி. திமுகவுக்காக உழைக்கும் எளிய தொண்டனும் உயரிய பதவிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் கட்சியை வழிநடத்த திட்டமிட்டுள்ளார். இதற்கு அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என்றார்.
திமுகவினரே இவ்வாறு கூறுவதை வைத்து பார்க்கும்போது, கட்சியில் களையெடுப்பு படலம் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது. ஆனாலும், இந்த களையெடுப்பில் முதலில் சிக்கி உள்ள நபர்கள் இப்போதே திமுக தலைமையிடம் குஸ்தியில் இறங்கி இருப்பதாக கூறப்படுவதுதான் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.