’’நான் இயேசு அல்ல; அடிச்சீங்கன்னா… திருப்பி அடிப்பேன்’’ – அண்ணாமலை பேச்சு!

நான் தன்மானமிக்க அரசியல்வாதி. கண்ணியமாக பேசினால் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பேசியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
சுதந்திர போராட்ட தியாகி பூலித்தேவனின் 307-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பூலித்தேவனின் புகழ் மற்றும் வீரம் குறித்து விவரித்தார். தொடர்ந்து, “நேற்றே மாமன்னன் பூலித்தேவனுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் முதலமைச்சர்கூட விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என பாஜக கேள்வி எழுப்பி இருந்தது.
முதன்முதலாக தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறையை அறிவித்தது திமுக அரசுதான். அப்போது அண்ணா முதலமைச்சராக இருந்தார். இன்றைக்கு விநாயகர் சதுர்த்திக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவிக்காததன் மூலம் திமுக அண்ணாவின் கொள்கைகளில் இருந்து எந்த அளவுக்கு மாறி உள்ளது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
விநாயகர் சதுர்த்திக்கு இந்து அறநிலையத்துறை வாழ்த்து தெரிவித்தது தவறு கிடையாது. அவர்கள் செய்த ஒரே தவறு, முதலமைச்சர் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காததே. திமுக எம்பி இந்து அறநிலையத் துறையை விமர்சித்திருப்பது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதுபோல  உள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற போது அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பார்ப்பேன் என கையெழுத்து போட்டு இருப்பதற்கு எதிராக உள்ளது முதலமைச்சரின் இந்த நடைமுறை.
image
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது ஒன்றும் தவறானது கிடையாது. வாழ்த்து சொல்லாததன் மூலம் முதலமைச்சர் தான் மத அரசியல் செய்கிறார் என்று ஊர்ஜிதம் செய்யப்படுவதோடு, பாஜக மத அரசியல் செய்கிறது என்று சொல்வதற்கு எந்த விதமான முகாந்திரமும் இல்லை. முதலமைச்சர் இந்து மதத்திற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, கிறித்தவ, இஸ்லாமிய சகோதரர்களுக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பாரதிய ஜனதா கட்சியை பார்த்து குற்றம்சாட்டட்டும். இதனை சாமானிய மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?
உ.பி சரியில்ல எனக் கூறி ஆட்சி செய்கிறீர்கள். தமிழ்நாட்டை விட உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் நிகர வருமானம் உயர்ந்துள்ளது. நிதியமைச்சர் இதற்கு பதில் சொல்லட்டும். நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு பதிலளித்துத்தான் நான் ட்வீட் போட்டேன். தமிழக அரசியலில் சாபக்கேடு அண்ணாமலை என்று அவர் என்னை பேசவில்லையா? கிழக்கிந்திய கம்பெனியோடு அவர்களுடைய மூதாதையர்கள் தொடர்பு வைத்துக்கொண்டது தமிழ்நாட்டு மக்களுக்கே தெரியும். பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பத்தினர் மூதாதையர்கள் கிழக்கிந்திய கம்பெனியிடம் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டாம் என பேசிய வரலாற்றை தெரிந்து கொண்டு பேசட்டும்.
image
அரசியலில் இல்லாவிட்டால் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு, வயலில் இறங்கி என்னால் வேலை பார்க்க முடியும். வீட்டிற்கு வெளியே கயிற்று கட்டிலை போட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனாலோ, முதலமைச்சராலோ வீட்டை விட்டு வெளியே வந்து இதனை செய்யமுடியுமா? என்னை அடித்தால் மறு கன்னத்தை காட்டுவதற்கு நான் இயேசு அல்ல; என்னை அடித்தால் நான் திருப்பி அடிப்பேன். நான் தன்மானமிக்க அரசியல்வாதி. கண்ணியமாக பேசித்தான் இந்த கட்சிக்கு தலைவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. யாருடைய கைகாலையும் பிடித்து நான் இந்த பதவிக்கு வரவில்லை. எனக்கு பதவியை கொடுத்துள்ளார்கள், பணியை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.