மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் பி.ஜி. மார்க்கெட்டிங் என்ற பெயரில் நிதி நிறுவனத்தை நடத்தி 170 பேரிடம் 3 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்று, திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக கடந்த 2013-ம் ஆண்டு மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவில் வழக்குப்பதிவு செய்யபட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியான தனிகைமலை (49) என்பவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவருடைய ஆதார் கார்டு பயன்பாட்டை மதுரை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் பாண்டிசெல்வம் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அவர் பெங்களுரூவில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்ற நிலையில், அவர் அங்கிருந்து தப்பி விட்டார். மேலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சென்னையில் தலைமறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கோபால கிருஷ்ணன் மற்றும் தலைமை காவலர் ஆறுமுகம் ஆகியோர் சென்னை திருமுல்லைவாயலில் இருந்த தனிகைமலையை கைது செய்தனர்.
கடந்த 9 வருடங்களாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM