கிறைஸ்ட்சர்ச்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் காலின் டி கிரான்ட்ஹோம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “அடிக்கடி காயத்தில் சிக்குவதால் முன்பு போல் என்னால் கடினமாக பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அணியிலும் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. மேலும் எனக்கு என்று ஒரு குடும்பம் உள்ளது.
கிரிக்கெட்டுக்கு பிறகு எனது எதிர்காலம் என்ன என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இது குறித்து சில வாரங்களாக தீவிரமாக சிந்தித்தேன். ஓய்வு பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்று உணர்கிறேன். 2012-ம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்ததில் இருந்து, அதிர்ஷ்டவசமாக போதுமான அளவுக்கு விளையாடி விட்டேன். எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.
36 வயதான கிரான்ட்ஹோம் ஜிம்பாப்வேயில் பிறந்தவர். அங்கிருந்து நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்து தேசிய அணியிலும் இடம் பிடித்த கிரான்ட்ஹோம் 29 டெஸ்டில் ஆடி 2 சதம் உள்பட 1,432 ரன்களும், 49 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். 45 ஒரு நாள் போட்டிகளில் 742 ரன்களுடன், 30 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் 41 ஆட்டங்களில் 505 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.