நியூயார்க்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரால் பரவும் நோய்கள், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு, போதிய உணவின்றி ஊட்டச்சத்து குறைபாடு என பல்வேறு வழிகளிலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 30 லட்சம் குழந்தைகளாவது மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தேவைப்படும் சூழலில் உள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலையில் தொடங்கிய பருவமழையால் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 116 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதில் 66 மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. யுனிசெப் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குழந்தைகளின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தான் தேசிய நெருக்கடி நிலையை அறிவித்தது. கூடவே, உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தங்களுக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தது. இதன் அடிப்படையில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
350 குழந்தைகள் உயிரிழப்பு: பாகிஸ்தான் மழை வெள்ளத்திற்கு இதுவரை 350 குழந்தைகள் உள்பட 1100 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 லட்சத்து 87 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. 6 லட்சத்து 62 ஆயிரம் வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. பாகிஸ்தானின் மிக முக்கியமான ஆறுகளில் வெள்ளம் கரைகளை உடைத்துக் கொண்டு பாய்வதால் வீடுகள், விவசாய நிலங்கள், சாலைகள், பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் இன்னும்பிற முக்கிய கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் வயிற்றுப்போக்கு, சுவாசப் பாதை தொற்று, தோல் அரிப்பு இன்னும் பிற மாசடைந்த நீரால் ஏற்படும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 40 சதவீதம் குழந்தைகளாக உள்ளனர். வெள்ள நிலவரம் இன்னும் சில நாட்களில் மேலும் மோசமடையும் என்பதால் உலக சுகாதார நிறுவனம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சுகாதார சேவைகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தொற்று நோய்ப் பரவலைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.