பிரபல மலையாள நடிகர் மீது தாக்குதல்: காங்கிரசார் மீதான வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி அருகே காங்கிரசாரின் சாலை மறியல் போராட்டம் நடந்த இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் தாக்கப்பட்ட சம்பவத்தில் காங்கிரசார் மீதான வழக்கை ரத்து செய்ய கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடந்த வருடம் கேரளா முழுவதும் காங்கிரசார் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கொச்சி அருகே மரடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலும் இந்த போராட்டம் நடந்தது.

காலை நேரத்தில் மறியல் நடந்ததால் பள்ளி, அலுவலகம் செல்பவர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். அந்த வழியாக பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் காரில் வந்தார். நீண்ட நேரம் காத்திருந்தும் அவரால் செல்ல முடியவில்லை. இதனால் காரில் இருந்து இறங்கியவர் போராட்டம் நடத்திய காங்கிரசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஜோஜு ஜார்ஜின் கார் தாக்கப்பட்டது. சிலர் சட்டையை பிடித்து இழுத்து தாக்கினர். இது தொடர்பாக கொச்சி மரடு போலீசில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் காங்கிரசார் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியின் சார்பில், கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 2 தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. புகாரை வாபஸ் பெறுவதாக கூறி நடிகர் ஜோஜு ஜார்ஜும் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுக்களை பரிசீலித்த கேரள உயர்நீதிமன்றம், பொது போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக காங்கிரசார் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்தது. ஜோஜு ஜார்ஜின் கார் தாக்கப்பட்டது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்குகளை வேண்டும் என்றால் ரத்து செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.