கராக்கஸ்,
கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் சேகுவேரா.
புரட்சியாளர், டாக்டர், அரசியல்வாதி இலக்கியவாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட சேகுவேராவுக்கு மொத்தம் 4 மகன்கள். அவர்களில் 3-வது மகன் கமிலோ சேகுவேரா.
60 வயதான கமிலோ சேகுவேரா கியூயாவில் தனது மகளுடன் வசித்து வந்தார். கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள சேகுவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக இவர் இருந்து வந்தார். அதில் சேகுவேராவின் கிளர்ச்சி தொடர்பான ஆவணங்கள் மற்றும் பிற பொருட்கள் உள்ளன.
இந்த நிலையில் வெனிசுலா நாட்டுக்கு சென்றிருந்த கமிலோ சேகுவேரா கடந்த திங்கட்கிழமை நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கியூபாவின் அரசு செய்தி நிறுவனமான பிரென்சா லத்தினா தெரிவித்துள்ளது.
கமிலோவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கியூபா அதிபர் மிகுவல் டியாஸ் கேனல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “ஆழ்ந்த வலியுடன், சேகுவேராவின் மகனும் அவரது யோசனைகளை ஊக்குவிப்பவருமான கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.