மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!

திருவாரூர்: மருத்துவத்துறை காலி பணியிடங்கள் கண்டறியப்பட்டு நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான முதியோர் பிரிவு கட்டடம், ரூ. 30 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் மற்றும் உபயவேதாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம், செருமங்கலம், ஆதிச்சபுரம், வெங்கத்தான்குடியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார நிலைய கட்டடங்கள் என மொத்தம் ரூ. 2 கோடியே 67 லட்சம் மதிப்பிலான கட்டடங்களை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள், புதிதாக 4,038 பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிரப்பப்படும். எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுவரை புதிதாக நிரப்பப்பட்ட 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள்.

ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு என்பது எங்கும் இல்லை. தற்கொலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில் வெளியில் தரும்படி வைக்க கூடாது. தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 380 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3,740 பயனாளிகள் பயன் பெற்றிருக்கிறார்கள் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.